இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் நீங்கள் வாழும் நாட்டினையும் ஆசீர்வதிப்பாராக.
Rosa Carmel Retreat Center
ஆண்டவரே இயேசுவே, தூய்மையும் உண்மையும் நிறைந்தவரே! உம்மைப் போற்றுகின்றேன். நல்லவரே! உம்மை புகழ்கின்றேன். உமது இரக்கம் என்றென்றும் நிலைத்து நிற்கச் செய்தவரே! நன்றி கூறுகின்றேன். “தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்; நாட்டை மீண்டும் நிலைநாட்டவும் பாழடைந்து கிடக்கும் உரிமைச் சொத்துகளை உடைமையாக்கவும், நான் உம்மைப் பாதுகாத்து மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக ஏற்படுத்தினேன்" என்று, இன்றைய இறைவார்த்தையால் நம்பிக்கை தருகின்றீரே! நன்றி இயேசுவே. “நான் உன்னை கைவிடவே மாட்டேன் உன்னை விட்டு விலகவும் மாட்டேன்” என்ற, உம் வார்த்தை என்னை வலுவூட்டி புதுப்படைப்பாய் ஒளிரச் செய்கிற தயவிற்காக நன்றி அப்பா. “நேர்மையாளர்களை அல்ல பாவியையே அழைக்க வந்தேன் என்று கூறி, பாவி என்னை உம் பிள்ளையாக ஏற்றுக்கொண்ட உமது இரக்கத்திற்கு உமக்கு நன்றி கூறுகின்றேன். நான் உம்மில் வழிநடந்து வர என் வாழ்நாட்களை கட்டளையிட்டு, செபத்தால் என் விசுவாச அரணைக் கட்டியெழுப்பிட அருள் தாரும். ஆண்டவரே இயேசையா! “என் வலக்கரம் உன்னைத் தங்கி கொள்ளும்” என்றவரே! இந்தத் தவக்காலத்தில் நான் உமக்கு உகந்தவனாக வாழ என்னைத் தாங்கி வழி நடத்தும். உம்மில் இன்னும் உயர உமது கரம் தந்து வழிநடத்தி வாழ்வைத் தாரும். “எனது அன்பில் இருந்து எதுவும் உன்னைப் பிரிக்க முடியாது” என்று, உம் வார்த்தையால் என்னைப் பலப்படுத்துவதற்காக நன்றி கூறுகின்றேன். இன்றைய நாளில் என் செயல்களைக் கட்டளையிடும்; என் வாயின் வார்த்தைகளுக்கு காவல் செய்தருளும்; என் செயல்கள் சொற்கள் உம் அன்பைப் பறைசாற்றிட எனக்குத் துணை செய்ய வேண்டும் என்று, கிறிஸ்துவின் நாமத்தில் செபிக்கிறேன். ஆமென்
5/8/20241 min read


Spiritual Growth Resources